மரணபயம்

மரணமும் அவளைக்
கண்டு பயப்படும், எங்கே
அவள் தன்னையும் ஏமாற்றி விட்டு
வாழ்ந்து விடுவாளோ என்று.

ஸ்கந்தகிரி

போன வாரம், ஸ்கந்தகிரிக்கு சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு கிளம்பினோம் பெங்களூருவிலிருந்து. ஸ்கந்தகிரி, பெங்களூருவிலிருந்து 70 கி.மீ. சிக்பல்லபூர் மாவட்டத்தில் உள்ளது.போகும் போதே, அப்படியே பசங்கள கூட்டிட்டு மோட்டார் வண்டிகள்ல ஏர்போர்ட் ரோட்டில் பறந்தோம். Tea Shop இந்தக் கடையில தான் போகும் போது டீ அடிச்சோம். நாங்க மலையடிவாரத்துக்கு போகும் போது 3:30 மணி ஆயிடுச்சு. இருட்டுல எங்க போறோம்னு தெரியல; பக்கத்துல என்ன, ஏது இருந்துச்சுனும் தெரியல… மலை உச்சிக்கு அதிகாலை 5:30 மணிக்கு போய் சேர்ந்தோம். கொஞ்ச நேரம் அங்க ஓய்வெடுத்துட்டு, சூரியனுக்காகக் காத்திருந்தோம். 7 மணி கிட்ட தான் ஆதவன் தரிசனம் கிடைத்தது. அதப் பார்த்திட்டு, அப்படியே சுத்திப் பார்த்தா, எல்லாம் இத்துனூன்டா தெரியுது. உலகம் இவ்வளவு தான்… கொஞ்ச நேரம் கழிச்சு, கீழ இறங்க ஆரம்பிச்சோம்; இப்ப தெரிஞ்சது நாங்க எந்த மாதிரி பாதைல வந்திருந்தோம்னு… வீட்டுக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் படுத்தது, திங்கள் கிழமை காலைல தான் தூக்கம் கலைந்தது. ஸ்கந்தகிரி - ஒருநாள் போயிட்டு வரலாம்.Skandagiri

பொன்னியின் செல்வன்

கல்கி தன் எழுத்துக்களால் செதுக்கிய ‘பொன்னியின் செல்வன்’ நாயக, நாயகிகளை கண்முன் நிறுத்துகிறார் ஓவியர் மணியம் தன் சித்திரங்களால்.

இதோ பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் ஓவியங்கள்!

குடகு மலை

போன வாரம் குடகுமலைக்குப் போயிருந்தோம். அப்டியே நாங்க எதிர்பார்த்ததுக்கு நேர்மாறா இருந்துச்சு. கொஞ்சம் வெயில் அதிகம் தான். அது சரி, வெயில் காலத்துல போனா வேற எப்படி இருக்கும்.

தலக்காவிரி
முதலில் நாங்க போனது ‘தலக்காவிரி’. ‘காவிரியோட ஆரம்பம் அங்க தான்டா, காவிரி எங்க இருந்து வருதுனு பார்த்திடலாம்னு’ போனா, எங்க ஊர்ல இருக்க சின்ன நீச்சல் குளம் மாதிரி இத்துனூண்டு இடத்துல தண்ணிய நெப்பி வச்சிட்டு, இங்க இருந்து தான் காவிரி வந்ததுனு சொல்லிட்டாங்க. பக்கத்துல மலையேற படிக்கட்டுக இருந்துச்சு. சரி, மலை மேல ஏதாவது கோவில் இருக்கும்னு நினைச்சுப் போன, வெட்ட வெளி; மொட்ட வெயில்…

அப்பீ நீர்வீழ்ச்சி
அடுத்துப் போனது ‘அப்பீ நீர்வீழ்ச்சி’; கப்பியா போச்சி. எவனோ தண்ணிய மேல இருந்து கொட்டுற மாதிரி இருந்துச்சு. பாறைகள் எல்லாம் தெளிவாத் தெரிஞ்சது. அங்க ஒரு தொங்குற பாலம் இருந்துச்சு. அங்க கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்து புண்பட்ட மனச தேத்திக்கிட்டோம்.

ராஜாவின் இருக்கை
இது ஒரு மலைப்பகுதியின் ஓரமாய் இருக்கும் பூங்கா. பூங்காவுல இருந்து சூப்பரா சூரிய அஸ்தமனம் பார்த்தோம். இங்க இருந்து ராஜா என்ன பண்ணாருனு தெரியல…

துபாரே
மறுநாள் காலையில, ‘துபாரே’யில யானைகளப் பார்த்தோம். ஆடு, மாடு மாதிரி அங்க யானைய மேச்சிட்டு இருக்காங்க. யானை குளியல், யானைக்கு சாப்பாடு ஊட்டுறது, யானை சவாரி… ஒரே யானை மயம். செமயா அடி விழுது, பாவம் யானைங்க!

Dubarey-Elephent camp

நிசர்கதாமா
இங்கேயும் அவ்வளவோ தண்ணி இல்ல. ஆனா அங்க பாருங்க ‘ஆறு ஓடுது’னு சொல்றாங்க. அதுபாட்டுக்கும் அமைதியா நின்னுட்டு இருக்கும் போது. இத தீவுனு வேற சொல்றாங்க.சில மான்கள அங்க அடைச்சு வெச்சிருக்காங்க.

நம்ட்ரோலிங் புத்த மடம்
எங்க பாத்தாலும் புத்த பிட்சுகள். வானவில் தோத்துரும், இங்க இருக்க வண்ண வண்ண ஓவியங்களுக்கு முன்னாடி. ஆளுயர சிற்பங்களும், அற்புதமான சித்திரங்களும், அங்கு நிலவிய அமைதியும் … அப்ப்ப்பா அருமையான இடம்.

Buddha - Nimdroling Monastery

குடகு மலை குளிர் பிரதேசம் தான்,  நாங்க போன நேரம் தான் சரி இல்ல, ஆனாலும் அது நல்லா தான் இருந்துச்சு.

தண்ணீர் தேசம்

காதலியின் கடல்நோய் கரைக்க,
மீனவ நண்பர்களுடன்,
கடலுக்குள் செல்லும்  கலைவண்ணன்,
படகு பழுதாகி கடல் நடுவே நின்று விட,
இயற்கையுடன் நடத்தும் போராட்டமே,
தண்ணீர் தேசம்.

தண்ணீர் தேசம் - கடல்நோய் மருந்து - விஞ்ஞானக் கதை விருந்து.

கரையில் வாழும் மீன்

காளியம்மன் கோவில்… வீட்டிலிருந்து பத்து, பதினஞ்சு நிமிஷம் நடந்தா வந்திரும். கல்லூரி படிக்கும் போது, தினமும் இந்தக் கோவிலுக்கு செல்வான். அப்புறம் சென்னையில வேல கிடச்சு, ஐயா அங்க போயிட்டாரு. அப்பப்ப தான் ஊருக்கே வருவான். அப்படி வரும் போது, ஊர் சுத்தவே, நேரம் சரியாப் போகுது. காளியம்மன சுத்தமா மறந்தாச்சு; அது சரி, இப்ப என்ன அடிக்கடி பரீட்ச வருதா?, இல்ல கோவில்ல பொங்கலாவது போடுறாங்காளா? இல்ல பக்கத்து வீட்டு பொண்ணு தான் கோவிலுக்குப் போகுதா? ;) … அன்று சனிக்கிழமை. அன்னிக்கு தான் ஊருக்கு வந்திருந்தான். அவன் வந்த நேரம், அன்னிக்கு ஏரியாவுல பவர் கட். அவனோட கூட்டாளிக வேற ஒருத்தனும் ஊர்ல இல்ல. எப்படியோ சாயங்காலம் வரைக்கும் ஓட்டிட்டான். வீட்டுக்குள்ளேயே இருக்க, வெறுப்பா இருந்துச்சு அவனுக்கு. இப்ப தான் அவனுக்கு காளியம்மன் ஞாபகம் வந்திச்சு. நல்ல புள்ளயா கோவிலுக்குக் கிளம்பினான். ரொம்ப நாளுக்கப்புறம், காளியம்மன் தரிசனம். கண்களை மூடி, அம்மனை வேண்டினான். பக்தியில் மூழ்கியிருந்த அவனை ‘தம்பி, தீபாராதனை…’ என்று ஐயர் எழுப்பிவிட்டார். கண்களைத் திறந்த அவனால், நம்ப முடியவில்லை. எதிரில் நின்று கொண்டிருந்தவள், அவளே தான். அவனது அஞ்சாம் வகுப்புத் தோழி. ஆறாவதிலிருந்து அவன் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான். அதற்குப் பின், இப்போது தான் அவளைப் பார்க்கிறான். மீண்டும் ஒருமுறை, மனதின் ஆழத்தில் படிந்திருந்த, அவளது சிறுவயது புகைப்படத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான்; அவளே தான்! ‘அவளுக்கு நம்மள ஞாபகம் இருக்குமா? நம்மள இல்லாமயா? எப்படி பேச்ச ஆரம்பிக்கலாம்?’…அவனுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான், மறுபடியும் அம்மனை மறந்து விட்டான், இம்முறை அம்மணியைப் பார்த்ததினால் ;) சுத்தி, முத்தி யார், யார் இருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டுக் கொண்டான். கிழிஞ்சது, அப்பாவோட வந்திருக்கா போல, கூட ஒரு குட்டி பக்கி வேற(எட்டு வயசு இருக்கும்). அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும் இரத்த சம்பந்தத்த தவிர வேற எந்த சம்பந்தமும் இல்ல போல. அவ அம்சமா இருக்கா; அவரோ அதுக்கு எதிர்மறையா இருக்காரு. கண்டிப்பா அவ, அவங்க அம்மா ஜாடையாத் தான் இருப்பா. எப்படியாவது அவகிட்ட பேசியாகணும்… அப்படியே அவ அப்பாகிட்டயும், நாலஞ்சு பிட்ட போடணும் ;) அவங்க கோவிலை விட்டு வெளியேறியதும் பின் தொடர்ந்தான். வேற சந்து வழியே போயி, அவங்களுக்கு எதிரே நடந்து வந்தான். அவங்க பக்கத்துல நின்னு, ‘நீ! நீ! ராசாத்தி தான? மாநகராட்சி பள்ளிக்கூடத்தில தான அஞ்சாப்பு படிச்ச… என்னை ஞாபகம் இருக்கா? நான் தான் …’ கொட்டி தீர்த்தான்.

‘யாருடி இவன்? …’ அவர் கண்களில் கோபம் தெரிந்தது.

‘தெரியலங்க.’

‘அப்புறம் எப்படிடி உன் பேரு தெரியுது. உண்மயச் சொல்லுடி.’ - இப்போது அவ கன்னத்தில ஒரு அறை விழுந்தது.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை. எதையும் தடுக்கவும் முடியவில்லை. அதற்குள் ஒரு சிறிய கூட்டம் கூடி விட்டது…….. எல்லாம் கண நேரத்தில் முடிந்து விட்டது.

அவளப் பத்தி அக்கம், பக்கம் விசாரிச்சான். அவ ஏழாப்பு படிக்கும் போது, அவங்க அப்பா இறந்துட்டாராம். அதுக்கு, அடுத்த வருசத்துலயே அவ அம்மாவும் இறந்துட்டாங்களாம். அவ பெரியப்பாவுக்கு, அவரு பிள்ளைகளுக்கு கஞ்சி ஊத்தவே முடியல; இதுல இவ வேற. அதனால அவரு, அவள ஒரு வீட்ல வீட்டோட வேலைக்கு சேர்த்து விட்டுட்டாராம். அங்க வேல பாத்துகிட்டிருந்தப்பவே, வரதட்சணை ஏதும் தேவையில்லனு அவள ஒருத்தரு கல்யாணம் பண்ணிகிட்டாரு. அப்ப அவளுக்கு பதினஞ்சு வயசு; அவருக்கு முப்பத்தி மூணு தான். அப்ப அவருக்கு வேல வேற இல்ல. அதான் அம்மணி வேலக்கி போறாங்களே… அவரு வேற யாருமில்லங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவள அறைஞ்சாரே, அவர் தான்.

வறுமையினால் துரத்தப்பட்டு, சமூக அட்டையிினால் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, கனவுகள் கலைக்கப்பட்டு, கரையில் வாழ்ந்து கொண்டிருந்தது… இல்லை இல்லை… தினமும் கரையில் துடித்துக் கொண்டிருந்தது அந்த மீன்.

வில்லு

காசு கொடுத்து, தெரிஞ்சே கிணத்துல குதிச்சிட்டோம். படத்த பத்தி சொல்றதுக்கு எதுவுமே இல்லங்க. என்ன கொடும சார் இது? நாங்க பண்ண தப்ப நீங்க பண்ணிறாதீங்க. தயவு செய்து, இந்த படத்துக்குப் போயிறாதீங்க.

சென்ற வருடத்தில்…

* வருடத்தின் துவக்கம் பந்திபூர், கொல்லிமலை, நாகர்கோலே என்று இன்பச் சுற்றுலாக்களாக அமைந்தது.
* நம்ம ஏரியாவப் பத்தி எடுத்த ‘சுப்ரமணியபுரம்’ படத்த, நம்ம ஊர்ல ‘தங்கரீகல்’ தியேட்டர்ல பார்த்தேன்.ஒரு தடவ போயிட்டு டிக்கெட் கிடைக்காம வீட்டுக்கு திரும்பி வந்தேன்னா பார்த்துக்கோங்க. படமும் சூப்பர்; தியேட்டரும் நிறைய வேலையெல்லாம் பண்ணி சூப்பரா இருக்கு.
* சென்னையில ஒரு வாரம் தங்கியிருந்தேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பள்ளித்தோழன் சம்பத்தை அவன் வீட்டில் சந்தித்தேன்.
* அரசியலில் கட்சித்தாவல் போல நம்ம வேலையில நான் கம்பெனி விட்டு கம்பெனி தாவினேன்.
* ஹம்பியில் கண்ணெதிரே துங்கபத்திரா ஆறு ரவியைத் தின்று, எங்களை துன்பத்தில் ஆழ்த்தியது. ரவி இருப்பது போலவே தோன்றினாலும், அது  ஒரு மறக்க முடியாத நிகழ்வாக மனதிற்குள் நடந்து கொண்டே இருக்கின்றது.
* தீபாவளி வழக்கம் போல இல்லாம, அமைதியா நண்பர்களோட நச்சுனு போச்சு.
* இந்த வருடம் படிச்ச புத்தகங்களில், ‘எனது மதுரை நினைவுகள்’ மற்றும் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ மனசில பதியிற மாதி்ரி இருந்தன.
* நண்பர்கள் சிலருக்கு திருமணம்  முடிந்தது. ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும் போதும் புதுப்புது பாடங்கள் கற்றுக் கொண்டேன்(சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், …)
* பொய் சொல்றதக் குறைக்கணும்னு முடிவு எடுத்தாலும் எடுத்தேன். சுத்தம்… நான் ரொம்ப அதிகமா பொய் சொன்னதே இந்த வருஷத்தில தான். பொய் சொல்றதும் ரொம்ப கஷ்டம் தான்னு தெரிஞ்சுகிட்டேன் ;)
* வருடத்தின் கடைசியில் நாட்கள் வேகமாகவே ஓடியிருந்தாலும், 2008 நன்றாக அமையவில்லை. வரும் வருடம் எல்லோர்க்கும் நல்வருடமாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்!

பொம்மலாட்டம் - செம ஆட்டம்

“சில நேரங்களில் சில மாற்றங்கள்
நியாயப்படுத்தப்படுகிறது.
சில நேரங்களில் சில மாற்றங்கள்
காயப்படுத்தப்படுகிறது.
அதைப் போன்ற சில
நியாயங்களும், காயங்களும்
கைகோர்த்துக் கொண்டது தான்,
இந்த ‘பொம்மலாட்டம்’.”

என்று பாரதிராஜாவின் முன்னுரையுடன் ஆரம்பிக்கின்றது திரைப்படம். அப்போது அந்த வரிகள் சரியாக விளங்கவில்லை. அவை தெளிவாகப் புரிந்தன, படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறும் போது.

பிரபல இயக்குநரின் திரைப்படம் ‘சினிமா’-வின் படப்பிடிப்பு, பாதி முடிவடைந்த நிலையில் கதாநாயகியால் நின்று விடுகிறது. இயக்குநர் தேடி அலைந்து கண்டுபிடித்த அறிமுக நாயகி கிருஷ்ணாவை வைத்து, மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. படம் வெளிவர இருக்கும் நிலையில் கூட,அறிமுக நாயகியை யாரும் அறியாத வண்ணம் திரைப்படத்தை விளம்பரப்படுத்தி இருந்திருக்கிறார், இயக்குநர். இந்த சமயத்தில், கதாநாயகியும் இயக்குநரும் ஒரு ஹோட்டலில் இருக்கும் செய்தியறிந்து, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் அந்த ஹோட்டலுக்கு விரைந்து செல்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து காரை வேகமாக ஓட்டி செல்லும் இயக்குநர், கதாநாயகியைக் கொன்று விட்டு, ஒரு மலையின் உச்சியில் தானும் அடிபட்டுக் கிடப்பது போல் நடிக்கிறார்.சந்தேகத்தின் பேரில் இயக்குநர் கைது செய்யப்படுகிறார். கொலை வழக்கு காவல் துறையிடமிருந்து சி.பி.ஐ-யிடம் செல்கிறது. ஏற்கனவே ‘சினிமா’ திரைப்பட படப்பிடிப்பின் போது இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் எந்தக் கொலைக்கும் ஆதாரங்கள் சரிவர இல்லாததால் இயக்குநர் விடுதலை செய்யப்படுகிறார். ‘எப்படி தான் செய்த கொலைகளிலிருந்து இயக்குநர் தப்பிக்கிறார்?’ என்பது தான் பொம்மலாட்டம்.

நானா படேகர், இயக்குநராக வாழ்ந்திருக்கிறார். அறிமுக நடிகையாக வரும்  ருக்மிணி விஜயகுமார் நடிப்பிலும், நடனத்திலும் அசத்தியிருக்கிறார். இயக்குநரை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக அர்ஜூன், அர்ஜூனின் காதலியாக கஜால் அகர்வால், படப்பிடிப்பு நடக்கும் ஒரு ஊரில் ஊர்ப் பெருசாக மணிவண்ணன்… என்று அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை அவரவர்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. அவர்கள் படப்பிடிப்பு நடத்தும் அழகிய இடங்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசப்படும் வசனங்கள் (’புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும், புலிக்கும் என்ன சம்பந்தமோ?’, ‘வெல்லப்பாகு …’ ;-) )என்று படத்தில் ரசிப்பதற்கு நிறைய இருக்கின்றது.  பாரதிராஜா பின்னிட்டார்!

நம்ம வீட்ல கார்த்திகை

எங்களால முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா, நானும் ரெமோவும் 6:15-க்கு வீட்டுக்கு வந்தோம். எல்லோரும் எங்களுக்காக காத்திருந்தார்கள். நம்மவீட்டை, நம்ம வீடு என்று என்னால் நம்ப முடியவில்லை. வீட்டின் வாசல் முன்பு கோலம், வாசல் வரைக் கேட்டுக் கொண்டிருந்த சாமிப் பாடல் … ம்ம்ம் … ரெண்டு நாளா தான் நம்மவீடு, வீடு மாதிரி இருக்குது;இதுக்கெல்லாம் காரணம், அண்ணன் பிரபுவின் பெற்றோர். முதன்முறையாக வீட்டில் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டோம். வழிபாட்டுக்குப் பின், வாசல், சுவர் என்று வீட்டைச் சுற்றி விளக்குகளை ஏற்றினோம். அதுக்கப்புறம், பொறி, கொளுக்கட்டை போன்ற பிரசாதங்களை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முடித்தோம்.  இனிதே கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடி விட்டு நாங்கள் உறங்கச் சென்றோம்; நாங்கள் ஏற்றி வைத்த தீபங்களின் ஒளியோ, இருளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

image102.jpg

Next Page »